கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உரக்கிடங்கு அகற்றப்பட்டு பூங்கா அமைக்கப்படும் பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி தகவல்


கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உரக்கிடங்கு அகற்றப்பட்டு பூங்கா அமைக்கப்படும் பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி தகவல்
x
தினத்தந்தி 14 March 2021 5:19 PM IST (Updated: 14 March 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள உரக்கிடங்கு அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா அமைக்கப்படும் என பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள உரக்கிடங்கு அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா அமைக்கப்படும் என பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.
நீதிபதி ஜோதிமணி ஆய்வு
கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலவை உரக்கிடங்கில் தேங்கி இருந்த குப்பைக் குவியல் தற்போது பயோமைனிங் முறையில் தரம் பிரித்து எடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. அந்த பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாய ஒருங்கிணைப்புகுழு தலைவர் நீதிபதி ஜோதிமணி நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 
மேலும் அந்த பகுதி மக்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது குறைகளை தெரிவித்த அப்பகுதி மக்களிடம், ‘ விரைவில் இந்த பகுதி சுத்தம் செய்யபட்டு பூங்கா அமைக்கப்படும். இந்த பகுதி வெட்டவெளியாக இருப்பதால் மரங்கள் அதிகம் வளர்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அந்த பகுதியில் அவர் மரக்கன்றுகளை நட்டி வைத்தார். 
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
பின்னர் நகரசபை கூடுதல் பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள நகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் வீடுகள் மற்றும் மார்க்கெட், கடைகளில் இருந்து தினசரி பெறப்படும் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களை அவர் பாராட்டினார். 
பின்னர் நீதிபதி ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:- 
பூங்கா அமைக்கப்படும்
நகராட்சிக்கு சொந்தமான கிருஷ்ணா நகர் கலவை உரக்கிடங்கில் தேங்கி இருந்த பழைய குப்பைகள் பயோமைனிங் முறையில் பிரித்து எடுக்கப்பட்டு 95 சதவீத குப்பை அகற்றப்பட்டது விட்டது. இன்னும் ஒரிரு மாதங்களில் எஞ்சியுள்ள குப்பை முழுமையாக அகற்றப்பட்டு அந்த இடம் மீட்கப்படும். பின்னர் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக பூங்கா அமைக்கப்படும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திட மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்கப்படும்.
குப்பைகள் தேங்குவது 
கோவில்பட்டி நகர்பகுதியில் அமைந்துள்ள சுமார் 27 ஆயிரம் குடியிருப்புகள் மற்றும் 4 ஆயிரம் வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், மார்க்கெட், கடைகள் ஆகிய இடங்களில் உற்பத்தியாகும் குப்பைகளை உருவாகும் இடத்திலே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும். இதன் மூலம் குப்பை ஒரு இடத்தில் மலைபோல் தேங்குவது தவிர்க்கப்படும். நிலம், நீர், காற்று மாசு படாமல் தடுக்கப்படும். குப்பைகளை பிரித்து கொடுப்பது பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பொறுப்பு. கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் ஐந்து இடங்களில் காய்கறி கழிவுகளில்
இருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின் போது நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, மண்டல பொறியாளர் இளங்கோவன், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம். சுகாதார அதிகாரி இளங்கோ, ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், காஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story