திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழா - 7 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர்
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய பஜார் தெருவில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில், நேற்று அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அங்காளம்மனை ஊர்வலமாக திருத்தணி நகர வீதிகளில் கொண்டு சென்றனர்.
இறுதியில் அம்மனின் பூப்பல்லக்கு நந்தி ஆற்றை அடைந்த நிலையில், அங்கு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள அம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல் பள்ளிப்பட்டு அருகே கீழ்கால்பட்டடை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 118-ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது.
அங்காள அம்மனை அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றிற்கு கொண்டு வந்தனர். அங்கு மணலால் வடிவமைக்கப்பட்ட அரக்கன் உருவத்தின் மீது கொழுக்கட்டை, சுண்டல், எலுமிச்சை பழம், பழ வகைகள் அனைத்தையும் வைத்து படைத்தனர். அதன் பிறகு ஏழு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அந்த படையலை கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிப்பட்டு, வெளியகரம், குமாரராஜூபேட்டை, குதிரை மேடு உள்பட 7 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கீழ்கால்பட்டடை கிராமத்தைச் சேர்ந்த பர்வதராஜகுலம் ஏற்பாடு செய்தது.
சோழிங்கநல்லூரில் உள்ள புகழ் பெற்ற அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story