மீண்டும் படகு போக்குவரத்து தொடக்கம்
மண்டபம் கடற்கரை பூங்காவில் மீண்டும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பனைக்குளம்,
மண்டபம் கடற்கரை பூங்காவில் மீண்டும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மண்டபம் கடற்கரை பூங்கா
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்காவில் செயல்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதுபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து சுற்றுலா இடங்களும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ள போதிலும் மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியிலோ சுற்றுலா படகு போக்குவரத்தோ தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் கடற்கரை பூங்கா வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகில்சென்று கடலின் அழகை பார்த்து ரசிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மீண்டும் படகு போக்குவரத்து
இந்த நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு மண்டபம் கடற்கரை பூங்காவில் மீண்டும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. கடற்கரை பூங்காவில் இருந்து கடல் பகுதி வரை சென்று வருவதற்கு 8 பேருடன் செல்வதற்கு ரூ.360 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு ரூ.75 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் கண்ணாடி இழை படகில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்று கடல் மற்றும் கடலில் உள்ள பலவகை மீன்களையும், பாம்பன் ரோடு மற்றும் ரயில் பாலத்தின் அழகையும் மிகுந்த ஆச்சரியத்துடனும் பரவசத்துடனும் சுற்றுலாபயணிகள் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story