திண்டுக்கல் அருகே அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பலி


திண்டுக்கல் அருகே அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 14 March 2021 9:35 PM IST (Updated: 14 March 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செம்பட்டி:
திண்டுக்கல் அருகே, ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 
 ஆத்தூர் காமராஜர் அணை
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இ்வர், அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் கார்த்திக் பிரபாகரன் (வயது 19). தனது தந்தை நடத்தி வருகிற கடையை அவர் கவனித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன் (19), செல்வபிரபாகர் (19), நாகராஜ் (19). இவர்கள் 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் பரத் (16) மற்றும் சுதர்சன் (19), சுரேஷ்குமார் (19), சரவணன் (19). இவர்கள் 8 பேரும் நண்பர்கள்.
வாரவிடுமுறை நாளான நேற்று இவர்கள், திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு சென்று குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 3 மோட்டார் சைக்கிள்களில் 8 பேரும் அணைக்கு சென்றனர்.
 தண்ணீரில் மூழ்கி... 
முன்னதாக வரும் வழியில் ஓட்டலில் சாப்பாடு வாங்கினர். அதனை அணை பகுதிக்கு கொண்டு சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.  அப்போது, கார்த்திக் பிரபாகரன் மட்டும் சாப்பிட்டு முடித்தவுடன் அணையில் இறங்கி குளித்தார். 
அணையின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். மேலும் தன்னை காப்பாற்றும்படி அபயகுரல் எழுப்பினார். 
இதனைக்கேட்ட லோகநாதன், செல்வபிரபாகர், நாகராஜ், பரத் ஆகிய 4 பேரும் அணையில் குதித்து கார்த்திக் பிரபாகரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். 
 5 பேர் பலி
தங்களது கண்ணெதிரே நண்பர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்குவதை கண்ட சுதர்சன், சுரேஷ்குமார், சரவணன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 5 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு முன்னதாகவே கார்த்திக் பிரபாகரன் உள்பட 5 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 5 பேரின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்
இதற்கிடையே தண்ணீரில் மூழ்கி பலியான 5 பேரின் உறவினர்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. 
தண்ணீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று மேலும் 4 பேர் பலியான சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
=====
‘உயிர் நண்பர்களை இழந்துவிட்டேன்'
உடன் சென்ற மாணவர் உருக்கம்
அணையில் மூழ்கி இறந்தவர்களுடன், உடன் சென்ற கல்லூரி மாணவர் சரவணன் (19) கூறுகையில், நாங்கள் அனைவரும் அணை பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது கார்த்திக் பிரபாகரன் மட்டும் குளிக்க சென்று, தண்ணீர் மூழ்கி தத்தளித்தார். அவரது சத்தம் கேட்டு லோகநாதன் உள்பட 4 பேர் அணையில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் அடுத்தடுத்து அணையில் மூழ்கி பலியானார்கள். அணையின் கரையில் இருந்த நானும், எனது நண்பர்களும் செய்வதறியாது திகைத்தோம். உடனே உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்தோம். மேலும் 108 ஆம்புலன்சுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தோம். ஆனாலும் எனது நண்பர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்களை பிணமாக தான் மீட்க முடிந்தது. நாங்கள் அடிக்கடி இந்த அணைக்கு வந்து செல்வோம். குளிப்போம். இதுவரைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனால் தற்போது உயிருக்கு உயிரான நண்பர்களை இழந்துவிட்ேடன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

Next Story