1000 ஆண்டு பழமையான கரிவரதராஜப்பெருமாள் கோவில் இடிந்து விழும் அவலம்
குமரலிங்கம் பகுதியில் 1000 ஆண்டு பழமையானதாகக்கருதப்படும் கரிவரதராஜப்பெருமாள் கோவில் பராமரிப்பில்லாமல் இடிந்து விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி வயல்வெளியில் புதைந்திருக்கும் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் வரலாறையும் சிலைகளையும் மீட்டு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் 1000 ஆண்டு பழமையானதாகக்கருதப்படும் கரிவரதராஜப்பெருமாள் கோவில் பராமரிப்பில்லாமல் இடிந்து விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி வயல்வெளியில் புதைந்திருக்கும் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் வரலாறையும் சிலைகளையும் மீட்டு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பழமையான கோவில்கள்
தமிழர் நாகரீகம், பண்பாடு, வழிபாடு, கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வாழ்க்கை முறை என அனைத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது பழமை வாய்ந்த கோவில்களாகும். அந்தவகையில் ஆண்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றின் கரையில் உடுமலைக்கு அருகில் கொழுமம், குமரலிங்கம், கடத்தூர் உள்ளிட்ட ஊர்களில் 1000 ஆண்டுகள் கடந்த பல பழமையான கோவில்கள் உள்ளது.
குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில், கொழுமம் சோழீஸ்வரர் கோவில், கல்யாண வரதராஜப்பெருமாள், தாண்டேஸ்வரர் கோவில், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பழமையான கோவில்கள் இன்றளவும் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கருதப்படும் கரிவரதராஜப் பெருமாள் கோவில் பராமரிப்பில்லாமல் புதர் மண்டியும் சிதைந்தும் பாழாகி வருகிறது.எனவே இந்த கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணில் புதைந்த சிலைகள்
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் கரைவழி நாட்டில் அமராவதி ஆற்றின் கரையில் உள்ள பழமையான கோவில்கள் இன்றளவும் இந்த பகுதிக்கு பெருமை சேர்த்து வருகின்றது. இந்த கரிவரதராஜப் பெருமாள் கோவிலின் உட்புறம் கருவறையைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம் தவிர முன் மண்டபம் ஒன்றும் உள்ளது. சுற்று மதிலில் ஆங்காங்கே கல்வெட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரு தள விமானம் பராமரிப்பில்லாமல் மரங்கள் முளைத்து படிப்படியாக சிதிலமடைந்து வருகிறது. சுற்றுச்சுவர் சேதமடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது.
அத்துடன் இந்த கோவிலின் தேவகோட்டத்தில் தெய்வங்களின் சிலைகள் எதுவும் இல்லை.ஆனால் கோவிலை ஒட்டிய வயல்வெளியில் சற்று தொலைவில் மண்ணில் புதையுண்ட நிலையில் தெய்வங்களின் சிலைகள் காணப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்த கரிவரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள சிலைகளை சிலர் கவர்ந்து செல்ல முயற்சித்ததாகவும் அவற்றின் எடை அதிகரித்துக் கொண்டே சென்றதால் வயல்வெளியில் இறக்கி வைத்தபோது அவை மண்ணில் புதையுண்டதாகவும் சில முதியவர்கள் கூறக் கேட்டதுண்டு. அதன் உண்மைத் தன்மை குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை.
தொல்லியல் துறை
ஆனால் தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு செய்தால் இந்த வயலில் புதைந்து கிடைக்கும் வரலாற்றை வெளிக் கொண்டு வர முடியும். அத்துடன் கோவில் உட்புறம் வவ்வால்கள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சில அதிகாரிகள் இந்த கோவிலை ஆய்வு செய்யும் நோக்கத்தில் கதவை உடைத்து திறந்துள்ளனர்.இதனால் முன்புறக்கதவு சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது பழமையான இந்த கோவில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.எனவே பழமையே நமது பெருமை என்பதை உணர்ந்து 1000 ஆண்டு பழமையான கரிவரதராஜப்பெருமாள் கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகப்பழமையான கோவில்களை தொல்லியல் துறையின் அனுமதியில்லாமல் புதுப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது.ஆனால் தொல்லியல் துறையில் போதிய அதிகாரிகள் இல்லாத நிலையில் பல பழமையான கோவில்கள் ஆய்வு செய்வதற்குள் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போய் விடும் நிலை ஏற்படுகிறது. நமது பாரம்பரிய கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டமே பல கோவில்களின் அழிவுக்குக் காரணமாகி விடும் நிலை உள்ளது.எனவே உரிய நேரத்தில் செய்யாத எந்த செயலும் பலனளிக்காது என்பதை உணர்ந்து கரிவரதராஜப் பெருமாள் கோவில் முழுமையாக சேதமடைவதற்கு முன் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
Related Tags :
Next Story