தாறுமாறாக ஓடிய கார்-வேன் மோதல்; மூதாட்டி பலி
கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் தாறுமாறாக ஓடிய கார், வேன் மீது மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
கொடைரோடு:
மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்தவர் வேலுபாண்டி. அவருடைய மனைவி பிரேமா (வயது 63). இவர்களது மகன் ஆனந்த்பாபு (31). இவர், தனது தாயை அழைத்து கொண்டு காரில் கோவை ேநாக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொட்டிசெட்டிபட்டி பிரிவு பகுதியில் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த கார் சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவரை கடந்து, எதிரில் வந்த வேன் மீது மோதியது. அத்துடன் அந்த கார் சாலையோர தடுப்பை உடைத்து கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த பிரேமா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். காரை ஓட்டிய ஆனந்த்பாபு படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story