செய்யாறு தொகுதியில் டிரைவர்கள் இல்லாததால் பறக்கும்படை வாகனங்கள் நிறுத்தி வைப்பு
செய்யாறு தொகுதியில் டிரைவர்கள் இல்லாததால் பறக்கும்படை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செய்யாறு,
செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்காக 3 பறக்கும்படை குழுக்கள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் என 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஒரு கண்காணிப்பு அதிகாரி, ஒரு பெண் போலீஸ் உள்பட 3 போலீசார் மற்றும் ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டு, அந்தக் குழுவுக்கு ஒரு அரசு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் 3 ஷிப்டுகளாகப் பிரித்து ஒவ்வொரு ஷிப்டுக்கும் அதிகாரிகள் மாறி மாறி பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
கடந்த 2 நாட்களாக காலை ஷிப்டுக்கான டிரைவர் பணிக்கு வந்து மதியம் 2 மணிக்கு சென்று விடுவார். அடுத்து ஷிப்டுக்குச் செல்ல வேண்டிய அதிகாரி, போலீசார் வீடியோகிராபர் வந்தாலும் அந்த வாகனத்தை இயக்க வேண்டிய டிரைவர் பணிக்கு வராததால் ஒவ்வொரு ஷிப்டிலும் 4 அல்லது 5 வாகனங்கள் ரோந்து பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டதற்கு பறக்கும்படை வாகனங்களை இயக்க டிரைவர்களை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த பணிக்கு விருப்பம் தெரிவித்து 2 நாட்கள் பணிக்கு வந்த சிலரும், தேர்வு செய்யப்பட்ட டிரைவர்களில் ஒரு சிலர் இன்னும் பணிக்கு வராததாலேயே பறக்கும்படை வாகனங்கள் ரோந்து பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றனர்.
3-வது நாளாக நேற்று மாலை டிரைவர்கள் வராததால் ரோந்து பணிக்கு செல்லாமல் தாலுகா அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story