முதல் கட்டமாக 22534 அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி


முதல் கட்டமாக 22534 அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி
x
தினத்தந்தி 14 March 2021 11:12 PM IST (Updated: 14 March 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் முதல் கட்டமாக 22,534 அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை,

தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற் கொண்டு வருகின்றனர்.

 கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, வடக்கு, தொண்டா முத்தூர், சூலூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 

இந்த சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதி யாக மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

இந்த வாக்குச் சாவடிகளில் 22,534 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு 3 கட்டங் களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

முதற்கட்ட பயிற்சி 

இதன் முதற்கட்ட பயிற்சி கோவை மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதிக்கு நிர்மலா கல்லூரியிலும், சிங்காநல்லூர் தொகுதிக்கு பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியிலும், கோவை வடக்கு தொகுதிக்கு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
 
கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். மேலும் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பயிற்சி முகாம் செல்ல அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

முகாமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. கண்ட்ரோல் யூனிட், வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய பேலட் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் வி.வி. பேட் எந்திரங்களை ஆகியவற்றை எவ்வாறு இணைக்க வேண்டும், ஏதாவது தொழில் நுட்ப பிரச்சினை ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நடைமுறை, வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறப்பட்டன. 

கலெக்டர் ஆய்வு 

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம்களை கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார். 

இந்த பயிற்சி முகாமின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டன.

Next Story