குடியிருப்புக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை
சிறுமுகை பெத்திக்குட்டையில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, ஆடுகளை கடித்து குதறியது. எனவே அதை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தனது தோட்டத்தில் 3 ஆடுகளை மேய்ச்சலுக்காக நீளமான கயிறு மூலம் கட்டி வைத்து இருந்தார். அந்த ஆடுகள் அங்கு மேய்ந்து கொண்டு இருந்தன.
இறந்து கிடந்தன
காலை 6.30 மணிக்கு திடீரென்று ஆடுகள் வித்தியாசமாக சத்தம் போட்டது. இதனால் துரைசாமி வெளியே வந்து பார்த்தபோது 2 ஆடுகள் கழுத்து மற்றும் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது.
மேலும் அங்கு சிறுத்தை வந்து சென்றதற்கான கால் தடங்களும் இருந்தன. இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரக அதிகாரி செந்தில்குமார் உத்தரவின்பேரில் வனவர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சிறுத்தை கடித்து குதறியது
மேலும் கால்நடை டாக்டர்கள் உகன்யா, தியாகராஜன் ஆகியோரும் அங்கு வந்தனர். பின்னர் அந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்ததில் 2 ஆடுகளை சிறுத்தை கழுத்தில் கடித்து ரத்தத்தை குடித்ததுடன், அவற்றை குதறிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். காலை நேரத்தில் சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
சிறுத்தை ஒருமுறை குடியிருப்புக்குள் வந்து ஆடுகளை கடித்து பழகிவிட்டால், தொடர்ந்து வந்துவிடும். இதனால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் மேய்ச்சலுக்கு செல்லும்போதும் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க உடனடியாக கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story