சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமருகல் அருகே சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பன்றிகளால் விபத்து
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருமருகல்-ஆண்டிபந்தல் மெயின் சாலையில் ஆண்டிபந்தல் ெரயில்வே கேட் அருகில் குப்பைகள் மற்றும் கோழி, ஆடு ஆகியவற்றின் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு செல்கின்றனர்.
இந்த கழிவு பொருட்களை தின்பதற்காக பன்றிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.அவ்வாறு வரும் பன்றிகள் சண்டை போட்டுக் கொண்டு சாலையில் ஓடுவதால் வாகனங்கள் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர்.
தொற்றுநோய்
இந்த பன்றிகள் ராராந்திமங்கலம் ஊராட்சி பகுதியில் வீடுகளில் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன. .சாலை ஓரம் கொட்டப்பட்ட கழிவுகளாலும், சுற்றித்திரியும் பன்றிகளாலும் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் குப்பைகளை அகற்றவும், சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story