தேயிலைத்தூள் விலை உயர்வு


தேயிலைத்தூள் விலை உயர்வு
x
தினத்தந்தி 15 March 2021 12:40 AM IST (Updated: 15 March 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஏல மையத்தில் கடந்த 5 வாரங்களுக்கு பிறகு தேயிலைத்தூள் விலை உயர்ந்து உள்ளது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.

தேயிலைத்தூள் ஏலம்

அதன்படி நீலகிரியில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர்.

இங்கு விற்பனை எண் 10-க்கான ஏலம் கடந்த 11, 12-ந் தேதிகளில் நடைபெற்றது. ஏலத்துக்கு 14 லட்சத்து 22 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 10 லட்சத்து 82 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 40 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

விலை உயர்வு

இந்த ஏலத்தில் 12 லட்சத்து 2 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. அதன் மதிப்பு ரூ.14 கோடியே 74 லட்சம் ஆகும். இது 86 சதவீத விற்பனை. அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு இருந்தது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.277, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.250 என விற்பனையானது. 

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.109 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.171 முதல் ரூ.211 வரை, டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.113 முதல் ரூ.117 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.171 முதல் ரூ.234 வரை ஏலம் போனது.

ஆறுதல்

அடுத்த ஏலம்(விற்பனை எண்-11) வருகிற 18, 19-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கு 13 லட்சத்து 59 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது. கடந்த 5 வாரமாக தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. 

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்தனர். ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது.


Next Story