சுத்தமல்லியில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் படுகாயம்
சுத்தமல்லியில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேட்டை:
சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 55). இவர் சம்பவத்தன்று நடுக்கல்லூரில் இருந்து மேலக்கல்லூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சேரன்மாதேவி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் மகன் சந்தோஷ் பூமி (25), வேலுச்சாமி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த வேலுச்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் அம்பையில் இருந்து நெல்லை பழைய பேட்டை அபிஷேகப்பட்டி தனியார் நூற்பாலைக்கு பெண் ஊழியர்கள் 8 பேரை ஏற்றி கொண்டு வேன் சுத்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. பொன்னாக்குடி கண்டித்தான்குளத்தை சேர்ந்த ஆபிரகாம் வேனை ஓட்டி வந்தார்.
கல்லூர் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது நிலை தடுமாறி ஓடி சாலையில் தலைக்குப்புற வேன் கவிழ்ந்தது. இதில் முக்கூடல் சிங்கம்பாறையை சேர்ந்த பாலமுருகன் மனைவி செந்தமிழ் செல்வி (34), மலையான்குளத்தை சேர்ந்த முகேஷ் மனைவி முத்துசெல்வி (30), அம்பை மூலச்சியை சேர்ந்த குமார் மனைவி லீலாவதி (27) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களுக்கு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகள் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story