சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா: தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு


சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா:  தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்  தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2021 1:08 AM IST (Updated: 15 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி:
சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் தென்காசி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வருமாறு:-

அரசு மருத்துவ கல்லூரி

* தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
* தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.
* ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும்.
* தென்காசியில் குளிர்பதன கிடங்கு, மாம்பழச்சாறு தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும்.
* தென்காசியில் கொப்பரை தேங்காய்களை காய வைப்பதற்காக மின் உலர் சாதனவசதி ஏற்படுத்தப்படும்.
* தென்காசியில் தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி நினைவைப் போற்றும் வகையில், விசுவநாதபேரியில் அவரது உருவச்சிலை நிறுவப்படும்.
* இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்
* தென்காசியில் யானை பாலம் அருகே சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

கடனாநதி-ராமநதி இணைப்பு

* கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும்
* கடையம் நீர்ப்பாசன வசதிகளை பெருக்குவதற்காக கடனாநதி-ராமநதி இணைக்கப்படும்.
* கடையநல்லூரில் கால்நடை மருத்துவமனை தொடங்கப்படும்.
* தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீனபடுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும்.
* கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி கிராமத்தில் புன்னையாபுரம் கால்வாயில் மேம்பாலம் அமைக்கப்படும்.

* தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* தென்காசியில் பீடி தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தருவதற்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படும்
* அடவிநயினார் அணையில் இருந்து உபரிநீர் அருந்தவபிராட்டி குளத்திற்கு கொண்டுவரப்படும்.

ஜவுளி பூங்கா

* சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
* ராமநதி அணை, முரியபஞ்சன் அணை, புதுக்கால்வாய் மற்றும் பாசன கால்வாய் ஆகியன தூர்வாரப்பட்டு சீர் செய்யப்படும்.
* ஊத்துமலை பெரியகுளத்திற்கு அடவிநயினார் அணை, இரட்டை குளம் கண்மாய் ஆகியவற்றிலிருந்து உபரிநீர் கொண்டுவரப்படும்.

* புளியங்குடியில் குளிர்பதன கிடங்கும், எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலையும் அமைக்கப்படும்..
* சேர்வலாறு ஜம்புநதி நீர்த்தேக்க திட்டம் நிறைவேற்றப்படும்.
* ராமநதி மேல் கால்வாய் மற்றும் இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.

* சிவகிரி செண்பகவல்லி அணை திட்டம் செயல்படுத்தப்படும்
* குண்டாறு அணையின் உயரத்தை அதிகரித்து, அதிக அளவில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் ஆகிய யூனியன்களில் உள்ள 163 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
* ஆலங்குளத்தில் நெல்கொள்முதல் மையம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story