வாக்குச்சாவடி சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் சென்று சேர நடவடிக்கை
100 சதவீத வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடி சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
100 சதவீத வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடி சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.
100 சதவீத வாக்குப்பதிவிற்கான முயற்சிகள் பாராட்டுக்குரியது தான். ஆனால் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு வாக்குச்சாவடி சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் சென்று சேர வேண்டியது அவசியமாகும்.
புகைப்படம்
கடந்த காலங்களில் வாக்குச்சாவடி சீட்டை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த வாக்குச்சாவடி சீட்டுக்களில் தேர்தல் வேட்பாளரின் சின்னங்கள் அச்சிடப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை நிறுத்தி விட்டது. தற்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிச்சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அதிலும் மாறுதல் செய்யப்பட்டு புகைப்படம் இடம் பெறாத வாக்குச்சாவடி சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் தேர்தல் ஆணையம் தற்போது இந்த முடிவினை மாற்ற வாய்ப்பில்லாததால் புகைப்படம் அச்சிடப்படாத வாக்குச்சாவடி சீட்டுகளே வாக்காளர்களுக்கு வழங்கப்படும் நிலை உள்ளது. வாக்குச்சாவடிச்சீட்டு வினியோகத்திற்கு நியமிக்கப்பட்ட பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை அந்த இடத்திற்கு வந்து வாக்குச்சாவடி ச்சீட்டுகளைப் பெற்றுச்செல்லுமாறு கூறியதால் பலர் இதனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னடைவு
மாவட்ட நிர்வாகமும் இது பற்றி அதிக அக்கறை செலுத்தாத நிலையில் அதிகபட்சமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் 70 முதல் 80 சதவீத வாக்கு சாவடி சீட்டு வினியோகிக்கப்பட்டு இருந்தது.
இதனால் வாக்குப்பதிவு நேரத்தில் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை கண்டறிய முயன்றதால் வாக்குப்பதிவு நடைமுறையில் தாமதம் ஏற்பட்டு வாக்குச்சாவடி அறையிலும் இதனால் தாமதம் ஏற்படும் நிலை இருந்ததால் வாக்குப்பதிவு சதவீதத்தில பின்னடைவு ஏற்பட்டது.
அவசியம்
எனவே வாக்குச்சாவடி சீட்டு வினியோகத்தில் மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வாக்குச்சாவடிசீட்டுகள்அனைத்து வாக்காளர்களுக்கும் சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இதனை ஒவ்வொரு பகுதிக்கும் கண்காணிப்பு குழுவை நியமித்து வாக்குச்சாவடி சீட்டு முறையாக வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
முக்கிய பணி
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 16 லட்சத்து 68 ஆயிரத்து 751 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்கள் அனைவருக்கும் வாக்குச் சாவடி சீட்டு சென்று சேர உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் இதனை கண்காணித்து உரிய அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக கிராம பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு சென்று சேர்க்க வேண்டியது மிக முக்கிய பணியாகும். இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமும், அத்தியாவசியமும் ஆகும்.
Related Tags :
Next Story