மின்மாற்றி பழுதை சரி செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல்
மின்மாற்றி பழுதை சரி செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை கிராமத்தில் கடந்த 12-ந்தேதி இரவு மின்மாற்றி திடீரென்று வெடித்ததில், அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. ஆனால் அந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதினை மின் ஊழியர்கள் சரி செய்யாததால் நேற்று முன்தினம் இரவு வரை அரணாரை கிராமத்தில் மின்சாரம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரம்பலூர்- துறையூர் சாலையில் அரணாரை பிரிவு சாலைக்கு வந்து, சரக்கு வாகனத்தை குறுக்காக நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசாரும், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story