குமரியில் ஆலயங்கள் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


குமரியில் ஆலயங்கள் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2021 1:45 AM IST (Updated: 15 March 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலயங்கள் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆலயங்கள் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் 
குமரி மாவட்டத்தில் கோவளம் மற்றும் கீழமணக்குடிக்கு இடையே ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு திட்டங்களை தயாரித்தது. ஆனால் துறைமுகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்று கூறி கடலோர மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் துறைமுகத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளன.
எனவே துறைமுக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா குமரி மாவட்டத்தில் துறைமுகம் கொண்டுவரப்படும் என்று கூறினார். மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் மூலம் கீழமணக்குடி பகுதியில் அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கான சில அறிவிப்புகள் வெளிவந்தது. இதனால் மீனவ மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக மீண்டும் போராட்டங்களை கையில் எடுக்க முடிவு செய்தனர்.
நாகர்கோவில் 
இந்த நிலையில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் முன் நேற்று போராட்டங்கள் நடந்தன.
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டார். மேலும் கடலோர மீனவ மக்கள் திரளாக கலந்துகொண்டு துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள்.
கீழமணக்குடி 
கீழமணக்குடி திருச்சிலுவை ஆலயம் முன் கிராம மக்கள் திரளாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சிலுவை ஆலய பங்குதந்தை ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். ஊர் தலைவர் சிலுவை இருதயம், துறைமுக எதிர்ப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளர் பார்த்த சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் மரியதாசன் உள்பட பலர் கலந்துகொண்டு துறைமுகத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் 27-ந் தேதி கீழமணக்குடியில் உள்ள அந்தோணியார் குருசடி அருகே அனைத்து மீனவ கிராம மக்களையும் ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
பேரணி 
குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தலம் சார்பில் துறைமுகத்துக்கு எதிராக பேரணி நடந்தது. பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை தாங்கினார். பேரணியை மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டிசெய்ல்ஸ் தொடங்கி வைத்தார். இதுபோல் லியோன் நகரில் இடைவிடா சகாய மாதா ஆலயம் பங்குத்தந்தை ஜெரோம் தலைமையிலும், மரமடி புனித அந்தோணியார் சிற்றாலயம், குழந்தை ஏசு காலனி சார்பில் இணை பங்குத்தந்தை சகாய சுனில் தலைமையிலும் பேரணி நடந்தது.
கன்னியாகுமரி 
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர் தலைமை தாங்கினார். 
ஊர் தலைவர் நாஞ்சில் மைக்கேல், இணை பங்குதந்தையர்கள் லெனின், சுரே‌‌ஷ், சிபு முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மீனவ மக்கள் கலந்துகொண்டனர்.
குறும்பனை 
குறும்பனை இக்னேசியஸ் ஆலயம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பங்கு பணியாளர் ஸ்டீபன் தலைமையிலும், மேல்மிடாலத்தில் மீனவர்கள் பணியாளர் பிலிப் ஹென்றி தலைமையிலும், மிடாலத்தில் நடுத்துறை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சிபில் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஆலயங்கள் முன்பு நடந்த போராட்டத்தில் திரளான மீனவர்கள் பங்கேற்றனர்.

Next Story