வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தட்டுப்பாடு


வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்: ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 15 March 2021 2:18 AM IST (Updated: 15 March 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், நேற்று முதலே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி விட்டது.

திருச்சி, 

வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், நேற்று முதலே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி விட்டது.

வங்கிகள் தனியார் மயம்

இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட 2 வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.ஏற்கனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை வங்கி ஊழியர்கள் நடத்தினர்.  அதன்படி திருச்சியில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா போராட்டமும் நடத்தினர்.

இன்றும், நாளையும் வேலைநிறுத்தம்

இந்த நிலையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) இந்தியா முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக வங்கிகளில் பண பரிமாற்றம், செக் கிளியரன்ஸ் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பாத காரணத்தால் அங்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட தொடங்கி விட்டது.

திருச்சியில் தட்டுப்பாடு

திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் (சனிக்கிழமை), நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்களும் வங்கிகளுக்கு பொதுவிடுமுறை நாளாகும். 2 நாட்களிலும் வாடிக்கையாளர்கள் பலர் தங்களின் அவசர தேவைக்கு ஏ.டி.எம். மையங்களையே நாடிச்சென்று பணம் எடுக்கும் நிலை இருந்தது.
நேற்று திருச்சி மாநகரில் பல வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் பணம் இன்றி, வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுவதால் ஏ.டி.எம். மையங்கள் முற்றிலும் பணம் இன்றி செயல்படாத சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story