சத்தி, கோபி, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


சத்தி, கோபி, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2021 2:40 AM IST (Updated: 15 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

சத்தி, கோபி, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு
சத்தி, கோபி, பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம் 
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.  அதன்படி சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது காரில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் இருந்ததை அதிகரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த கல்குவாரி உரிமையாளரான ஹெக்டே என்பதும், சேலத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கு கொண்டு சென்றதும்,’ தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து பவானிசாகர் தேர்தல் நடத்தும் அதிகாரி உமா சங்கரிடம் ஒப்படைத்தனர். 
கோபி
கோபியை அடுத்த பெரிய கொரவம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து சரக்கு வேன் டிரைவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘அவர் கோபியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், சமையல் மசாலா பொடிகளை கடையில் விற்பனை செய்துவிட்டு அதற்குண்டான தொகையை வசூல் செய்து வந்ததும்,’ தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் ஒப்படைத்தனர்.
பெருந்துறை
இதேபோல் பெருந்துறையில் பவானி ரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 400 இருந்ததை கண்டுபிடித்தனர். 
பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘சரக்கு வேனில் வந்த கோழி வியாபாரி அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் கோழிகளை விற்பனை செய்து அதற்குண்டான பணத்தை வசூலித்து வந்ததும்,’ தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெருந்துறை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான கார்த்திக்கிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

Next Story