அரசு பஸ் பயணிகளிடம் சளி மாதிரி சேகரிப்பு
அரசு பஸ் பயணிகளிடம் சளி மாதிரி சேகரிப்பு
ஊட்டி
குன்னூர்- கோத்தகிரி இடையே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
அதிகரிக்கும் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு எண்ணிக்கை 48 ஆக நீண்ட நாட்கள் இருந்தது.
இதற்கிடையே திடீரென தொற்று பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட எல்லையில் உள்ள 5 சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அரசு பஸ்களை நிறுத்தி...
மேலும் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்படும் நபர்கள் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அரசு பஸ்களில் செல்லும் பயணிகளை கீழே இறக்கி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு அரசு பஸ்சில் செல்லும் பயணிகள் அட்டவளை என்ற இடத்தில் கீழே இறக்கி விடப்படுகின்றனர்.
அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பயணிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் காரணமாக அவசர வேலையாக செல்கிறவர்கள், வேலைக்கு செல்கிறவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரிசோதனை
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை சோதனை செய்வதால் அவதியடைந்து வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story