நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை


நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2021 4:23 AM IST (Updated: 15 March 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை

கூடலூர்

சுற்றுலா பயணிகள் பார்வையிட நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

நாடுகாணி தாவரவியல் மையம்

கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, கூடலூர், நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இதில் நாடுகாணி வனச்சரகத்தில் தாவரவியல் மைய பூங்கா அமைந்துள்ளது. இது கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் கல்விச்சுற்றுலா மையமாக திகழ்ந்து வருகிறது. 

இயற்கை எழில் நிறைந்த பசுமை பள்ளத்தாக்குகள், அரிய வகை தாவரங்கள் பராமரிப்புக்கூடம், ஆர்கிட்டோரியம், திசு வளர்ப்பு மையம், பெரணி இல்லங்கள், வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடற்பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் உள்ளது. இது தவிர காட்சி முனை பகுதிகளும் இருக்கிறது.

கடந்த காலங்களில் தாவரவியல் மையத்துக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே தாவரவியல் மையத்தை பயன்படுத்தி வந்தனர். 

னவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதன் மூலம் நாடுகாணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கொரோனாவால் மூடப்பட்டது

இந்தநிலையில் தாவரவியல் பூங்கா மையம் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடுகாணி தாவரவியல் மையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. 

இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி பகுதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவானது.
இருப்பினும் கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் தாவரவியல் மையத்தில் பராமரிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. 

மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து தாவரவியல் மையம் மூடப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தாவரவியல் மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

பார்வையிட அனுமதி

தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சுற்றுலா தலங்களும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தாவரவியல் மையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். 

எனவே தாவிரவியல் மைய பூங்காவை திறக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நாடுகாணி தாவரவியல் மையத்தை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றனர்.


Next Story