வார்டனை தாக்கி விட்டு கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய 4 சிறுவர்கள் பிடிபட்டனர்
கோவையில் வார்டனை தாக்கி விட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் பிடிபட்டனர்.
கோவை
கோவையில் வார்டனை தாக்கி விட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் பிடிபட்டனர்.
கூர்நோக்கு இல்லம்
கோவை மற்றும் பிற மாவட்டங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இங்கு மொத்தம் 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் 2 அறைகளில் அடைக்கப் பட்டிருந்த சிறுவர்கள் இரவு சாப்பாட்டுக்காக வெளியே விடப்பட்ட னர். இதில், 6 சிறுவர்கள் திடீரென்று வார்டனை தாக்கினர். பின்னர் அவரை அங்குள்ள அறையில் தள்ளி வெளிப்பக்கமாக பூட்டினார்கள். மற்ற 5 சிறுவர்களை மற்றொரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
தேடுதல் வேட்டை
பின்னர் வெளிகேட்டுக்கான சாவியை எடுத்து கதவை திறந்து வெளியே தப்பி ஓடினர். இதையடுத்து அறையில் இருந்து வெளியே வந்த வார்டன் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இரவு 7 மணிக்கு சிறுவர்கள் தப்பிய நிலையில் 10 மணிக்குத்தான் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனால் அந்த சிறுவர்கள் பஸ், ரெயில் மூலம் வெளியூர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோவையில் உள்ள பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில் போலீசார் இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
4 சிறுவர்கள் பிடிபட்டனர்
இதில் அந்த சிறுவர்கள் பஸ்சில் உடுமலைக்கு தப்பிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ரேஸ்கோர்ஸ் போலீசார் உடுமலை பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி 4 சிறுவர்களை மடக்கி பிடித்தனர்.
தப்பியோடிய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட 3 சிறுவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் மீது கொலை வழக்கு உள்ளது. சிறையில் அடைபட்டு கிடக்காமல் சுதந்திரமாக வெளி யில் சுற்றித்திரிய வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியதாக போலீசில் தெரிவித்து உள்ளனர்.
கோவை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இதுவரை 5 முறை சிறுவர்கள் தப்பி உள்ளனர். எனவே அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story