சேலம் சூரமங்கலத்தில், அடுத்தடுத்து 5 கடைகளில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
சேலம் சூரமங்கலத்தில் அடுத்தடுத்து 5 கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கடைகளில் தீ
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு செல்போன், மளிகை, டீக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் அப்துல்கபூர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ மளமளவென பரவி அருகில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. இதனால் அந்த கடைகளில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
4 மணி நேரம் போராட்டம்
அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, மாவட்ட உதவி அலுவலர் முருகேசன் ஆகியோர் தலைமையில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் உள்பட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மளிகை கடைக்குள் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதேநேரத்தில் டீக்கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. உடனே சூரமங்கலம் மற்றும் ஓமலூரில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
பின்னர் சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story