சங்ககிரி அருகே, விவசாயி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கூலிப்படையை ஏவி மகனை கொன்ற தந்தை; குடிபோதையில் பணம் கேட்டு அடித்து உதைத்ததால் ஆத்திரம்
சங்ககிரி அருகே விவசாயி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குடித்து விட்டு பணம் கேட்டு அடித்து உதைத்த ஆத்திரத்தில் தந்தையே கூலிப்படையை ஏவி மகனை கொன்றது அம்பலமாகி உள்ளது.
தந்தை மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விவசாயி கொலை
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அன்னதானப்பட்டி கிராமம் உப்பு பாளையம் நாயங்காடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 71). இவருடைய மகன் சேகர் என்ற ராமசாமி (45). விவசாயியான இவர் கடந்த 3-ந் தேதி இரவு தனது தோட்டத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் தனிப்படை அமைத்து ெகாலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
மெக்கானிக் கைது
இதனிடையே தங்காயூர் பகுதியை சேர்ந்த லாரி பட்டறை மெக்கானிக்கான சதீஷ்குமாரை (30) தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் சங்ககிரி லாரி பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறேன். எனது தந்தை மாணிக்கம் மாட்டு வியாபாரம் செய்து வந்தார். அவரை பார்க்க எங்கள் வீட்டிற்கு உப்பு பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் அடிக்கடி வருவார். அதில் எனக்கும், நாச்சிமுத்துவுக்கும் பழக்கமானது.
கடந்த ஒரு மாதமாக அவருடைய மகன் சேகர் என்கிற ராமசாமி மது குடித்துவிட்டு வந்து தன்னிடம் பணம் கேட்டு தகராறு செய்து வருகிறான் என்று நாச்சிமுத்து என்னிடம் கூறினார்.
அடிக்கிறான்
சேகருக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் என்னை அடிக்கிறான், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அடித்து காலை உடைத்து விட்டான், அதன் பிறகு ஒரு முறை எனது பல்லையும் உடைத்து விட்டான் என்று நாச்சிமுத்து என்னிடம் பலமுறை புலம்பினார். மேலும் தனது மகன் மாட்டை விற்றும், கடன் வாங்கியும் மது குடித்துவிட்டு ஊதாரித்தனமாக செலவு செய்து வருகிறான், என்னால் அடி தாங்க முடியவில்லை, எனது மகனை முடிக்க ஆள் வேண்டும், யாராக இருந்தாலும் சொல்லு என்று நாச்சிமுத்து என்னிடத்தில் கேட்டார்.
நான் எங்கள் ஊரைச் சேர்ந்த பூபதி என்பவர் பற்றி கூறினேன். பூபதி நாச்சிமுத்துவிடம் பசங்க இருக்காங்க நான் வரச் சொல்கிறேன் என்று சொன்னார். கடந்த 1-ந் தேதி கொங்கணாபுரம் பிரிவு மேம்பாலம் அருகே பூபதி அவருடைய நண்பர்களான கொங்கணாபுரம் கச்சுபள்ளி வடுகபட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (22), சங்ககிரி மஞ்சக்கல்பட்டி வரதங்காட்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி (27), பிரகாஷ்ராஜ் (22) ஆகியோரை அழைத்து வந்தார்.
ரூ.50 ஆயிரம்
அப்போது நாச்சிமுத்துவும் அங்கு வந்தார். அங்கு கூடியிருந்த நாங்கள் எப்படி கொலை செய்வது என்பது பற்றி பேசினோம். அப்போது நாச்சிமுத்து தங்கள் தென்னந்தோப்பின் வழியாகச் செல்லும் பாதையில் வைத்து தனது மகனை முடித்துவிடலாம் எனக்கூறினார். நான் நேரம் பார்த்து சொல்கிறேன், நீங்கள் வாருங்கள் என்று சொன்னார். நாங்களும் சரி என்று கூறினோம். நாச்சிமுத்துவிடம் இந்த வேலையை முடிக்க எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று பூபதி கேட்டார் அதற்கு நாச்சிமுத்து ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக கூறி, என்னிடத்தில் ரூ.20 ஆயிரம் முன்பணத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
கொலை செய்து விட்டோம்
கடந்த 3-ந் தேதி நாச்சிமுத்து என்னிடத்தில் போன் செய்து என் மகன் வீட்டில் இருக்கிறான், இனிமேல் தான் வெளியே போவான், நீங்க வாங்க என கூப்பிட்டார். நான் பூபதியிடம் கூறவே அவர் பிரவீன், சக்தி, பிரகாஷ்ராஜ் ஆகியோரை கொங்கணாபுரம் கெமிக்கல் பிரிவு ரோடு பகுதிக்கு வர சொன்னார். 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சக்தி கையில் சைக்கிள் பம்பு வைத்திருந்தான். அந்த 3 பேரையும் நான் நாச்சிமுத்து வீட்டிற்கு கூட்டிச்சென்று வீட்டை காட்டிவிட்டு அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
இரவு 9.30 மணி அளவில் தங்காயூருக்கு 3 பேரும் வந்து என்னை கூப்பிட்டு சேகரை கொலை செய்து விட்டோம், பணம் கொடுங்கள் என்று கேட்டனர். நான் அவர்களிடத்தில் ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி வைத்தேன்.
13-ந் தேதி சக்தி எனக்கு போன் செய்து மீதி பணம் கேட்டார். நான் வாங்கித் தருவதாக கூறி எனது வீட்டில் இருந்து புறப்பட்ட போது என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே சதீஷ் குமார் கொடுத்த தகவலின் பேரில் நாச்சிமுத்து, பிரவீன், சக்தி, பிரகாஷ்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தங்காயூரை சேர்ந்த பூபதி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story