திருச்செந்தூர் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைப்பு குழுவினரின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்


திருச்செந்தூர் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைப்பு குழுவினரின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 15 March 2021 8:19 PM IST (Updated: 15 March 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைப்பு குழுவினரின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தடை இல்லா சான்று வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக வருவாய் துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை ஆகியவற்றை கண்டித்து டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு மற்றும் பராமரிப்பு சங்கத்தின் சார்பில் வீடுகள் முன்பு கருப்பு கொடியேற்றி தேர்தல் புறக்கணிப்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
இதையடுத்து, நேற்று மாலையில் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகேசன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆனந்தன், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்க தலைவர் முரசு தமிழன்பன், செயலாளர் வேம்படி முத்து, பொருளாளர் இளந்தளிர் முத்து, வக்கீல் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கத்தின் கோரிக்கையின்படி சிலை அமைக்க வருவாய்த்துறை சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையிடமிருந்து ஒரு வாரத்தில் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களின் அறிக்கையின்படி அம்பேத்கர் சிலை அமைக்க கலெக்டரிடம் இருந்து உத்தரவு பெற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Next Story