விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 25 பேர் வேட்புமனு தாக்கல்- மொத்தம் 43 மனுக்கள் பெறப்பட்டன


விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 25 பேர் வேட்புமனு தாக்கல்- மொத்தம் 43 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 15 March 2021 9:59 PM IST (Updated: 15 March 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலின் 2-ம் நாளில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 25 பேர் 43 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம், 


தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. 
இதில் 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 
இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் 2-ம் நாளான நேற்று அரசியல் கட்சியினரும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விழுப்புரம்- திண்டிவனம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் இரா.லட்சுமணன், இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம், 2 சுயேட்சை வேட்பாளர்கள் என்று ஆகிய 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் கூடுதலாக 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அர்ஜூணன், இவருக்கு மாற்று வேட்பாளராக கனகராஜ், தி.மு.க. வேட்பாளர் சீத்தாபதி, இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது கணவர் சொக்கலிங்கம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சிமுத்து ஆகிய 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் சீதாபதி கூடுதலாக 3 மனுக்களையும், சொக்கலிங்கம் கூடுதலாக 3 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

செஞ்சி- விக்கிரவாண்டி

செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மஸ்தான், இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சைதானிபீ, பா.ம.க. வேட்பாளர் ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுமார், சுயேட்சை வேட்பாளர் பிரபு ஆகிய 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் மஸ்தான் கூடுதலாக 2 மனுக்களையும், சைதானிபீ கூடுதலாக 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபாஆஷ்மி, சுயேட்சை வேட்பாளர்கள் ராஜீவ்காந்தி என்கிற இளஞ்செழியன், காயத்திரி ஆகிய 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி மட்டும் கூடுதலாக 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

திருக்கோவிலூர், வானூர், மயிலம்

திருக்கோவிலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொன்முடி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முருகன் ஆகிய 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் பொன்முடி மட்டும் கூடுதலாக 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
வானூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணியும், மயிலம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சிவக்குமாரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

25 பேர் மனுதாக்கல்

மொத்தத்தில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25 வேட்பாளர்கள் 43 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்றும் (செவ்வாய்க்கிழமை) 3-வது நாளாக வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

Next Story