கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்


கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 16 March 2021 12:23 AM IST (Updated: 16 March 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

கரூர்
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையொட்டி கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடந்த 12-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வேட்புமனுதாக்கல் நடைபெறவில்லை. 
நேற்று 2-வது நாளாக வேட்புமனுதாக்கல் நடைபெற்றது. இதனையொட்டி கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் மதியம் வேட்புமனுதாக்கல் செய்தார். அக்கட்சியின் மாற்று வேட்பாளராக கே.சி.பரமசிவம் வேட்புமனுதாக்கல் செய்தார்.
வி.செந்தில்பாலாஜி  
இதேபோல் தி.மு.க. வேட்பாளரான வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் நேற்று மதியம் வேட்புமனுதாக்கல் செய்தார். அக்கட்சியின் மாற்று வேட்பாளராக ஆர்.வி.அசோக்குமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குளித்தலை 
 குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  என்.ஆர். சந்திரசேகர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான ஷேக்அப்துல்ரகுமானிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் மாற்று வேட்பாளராக எம்.எஸ்.கண்ணதாசன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  நாம் தமிழர் கட்சியின் குளித்தலை  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சீனி. பிரகாஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அக்கட்சியின் மாற்று வேட்பாளராக உதயகுமார் என்பவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நேற்று வரை மாற்று வேட்பாளர் உள்பட மொத்தம் 4 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அரவக்குறிச்சி 
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தவசெல்வத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 
கிருஷ்ணராயபுரம் (தனி) 
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துக்குமார் என்கிற தானேஷ் நேற்று கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  கரூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் கரூர்-18, குளித்தலை-4, அரவக்குறிச்சி-1, கிருஷ்ணராயபுரம்-1 என மொத்தம் 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Next Story