முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரமாகிறது


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரமாகிறது
x
தினத்தந்தி 16 March 2021 12:48 AM IST (Updated: 16 March 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரமாகிறது.

புதுக்கோட்டை, மார்ச்.16-
கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரமாகிறது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் பெருமளவு பொதுமக்கள் முக கவசம் அணிவதை தவிர்த்துவிட்டனர்.
 இதேபோல வணிக நிறுவனங்கள், கடைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பெருமளவு குறைந்துவிட்டன என்றே கூறலாம். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரிரு நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பறக்கும் படை
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவையை மீண்டும் தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்ததை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்தப்படுகிறது. பறக்கும் படை அமைக்கப்பட்டு வணிக நிறுவனங்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுமையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
விழிப்புணர்வு
இதற்கிடையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே பொதுமக்களிடம் முககவசம் அணிவதன் அவசியம் பற்றி நேற்று நகராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன் கலந்து கொண்டு, முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசங்களை இலவசமாக வழங்கினர். வீட்டை விட்டு வெளியே வரும் போது அடுத்த முறை முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். கொரோனா பரவல் மற்றும் தொற்று அதிகரிக்காமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Next Story