தளவாய்சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார்


தளவாய்சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார்
x
தினத்தந்தி 16 March 2021 1:31 AM IST (Updated: 16 March 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தளவாய்சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுபோல் பத்மநாபபுரம் தொகுதிக்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார்.

நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தளவாய்சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுபோல் பத்மநாபபுரம் தொகுதிக்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் 
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஆகியவை நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் முதல் நாள் வேட்புமனு தாக்கலின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். 13, 14 -ந் தேதிகள் விடுமுறை தினம் என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.
தளவாய்சுந்தரம் 
2-வது நாளாக நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது. கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார். 
இதற்காக அவர் நேற்று மதியம் 1.15 மணியளவில் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து தேர்தல் அதிகாரி சொர்ணராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அசோகன் உடனிருந்தார்.  பின்னர் பூதப்பாண்டி ஜீவாதிடலில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து, அதன் அருகே உள்ள வண்டிமலச்சி அம்மன் கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். அவருடன் கட்சி தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். 
மனோதங்கராஜ்
இதே போல பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் தொண்டர்களுடன் தக்கலை அண்ணா சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சப்-கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டார்.
தொடர்ந்து அவர் சப்-கலெக்டர் சிவகுருபிரபாகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி ஆகியோர் உடனிருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
 
வேட்புமனு தாக்கலையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இரண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுவதால் கலெக்டர் அலுவலக சுற்று வட்டார பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சொத்து மதிப்பு
தளவாய்சுந்தரம் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பாக அசையும் சொத்துக்கள் ரூ.1 கோடி 15 லட்சத்து 70 ஆயிரத்து 97 எனவும், அசையா சொத்துக்கள் ரூ.77 லட்சம் எனவும் கூறியுள்ளார். 
இதுபோல் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.வின் வேட்புமனுவில் அசையும் சொத்துக்கள் 2 கார்கள் மற்றும் ரூ.13 லட்சத்து 96 ஆயிரம் 192 எனவும், அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story