பெட்ரோல் விற்பனை நிலைய குத்தகைதாரரிடம் ரூ.11½ லட்சம் பறிமுதல்


பெட்ரோல் விற்பனை நிலைய குத்தகைதாரரிடம் ரூ.11½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2021 2:17 AM IST (Updated: 16 March 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பெட்ரோல் விற்பனை நிலைய குத்தகைதாரரிடம் ரூ.11½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்:

காரில் சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தலா 9 தேர்தல் பறக்கும் படையினரும், தலா 9 தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும், 2 வீடியோ கண்காணிப்பு குழுவினருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தின் கீழே வட்டார வழங்கல் அலுவலர் பெரியண்ணன் தலைமையில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கருப்பையா, ஜீவிதா ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
உரிய ஆவணங்களின்றி இருந்த...
அதில் இருந்த பையில் உரிய ஆவணங்களின்றி ரூ.11 லட்சத்து 56 ஆயிரத்து 723 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மெயின்ரோடு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வரதராஜ் (வயது 45) என்பது தெரியவந்தது. அவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தை கடந்த 5 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். அந்த விற்பனை நிலையத்தில் பெட்ரோல்-டீசல் விற்ற பணத்தை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றதாக தேர்தல் பறக்கும் படையினரிடம், வரதராஜ் கூறினார்.
வருமான வரித்துறையினர் விசாரணை
ஆனாலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததாலும், மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு சென்றதாலும் இது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வருமான வரித்துறை உதவி இயக்குனர் வினோத் தலைமையிலான அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ‘சீல்’ வைக்கப்பட்டு பெரம்பலூர் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story