அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்


அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 15 March 2021 8:47 PM GMT (Updated: 15 March 2021 8:47 PM GMT)

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர்:

வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய 2 தொகுதிகளும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன.
இதில் கடந்த 12-ந் தேதி குன்னம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 13, 14-ந் தேதிகள் விடுமுறை நாட்கள் என்பதால் அந்த தேதிகளில் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை.
அ.தி.மு.க. வேட்பாளர்கள்
இந்நிலையில் நேற்று அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன், அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஏழுமலையிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், குன்னம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரிடம் வேட்புமனுைவ தாக்கல் செய்தார். பெரம்பலூர் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க. - பா.ம.க. வேட்பாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வக்கீல் பாலு, ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கலைவாணனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பெரம்பலூர்(தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி முருகேசனும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அரியலூர் தொகுதியில் 6 பேர்
மேலும் அரியலூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் துரை.மணிவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணா குமார் மற்றும் அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக கணேசன், நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக சுகுணா ஆகியோர் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனவை தாக்கல் செய்தனர். இங்கு வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மண்பானையில் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் தொகை கட்டினார். இதன்படி அரியலூர் தொகுதியில் நேற்று மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நீல மகாலிங்கம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் அமர்நாத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கிருமிநாசினி, முககவசம்
பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களின் வாகனங்களை அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்னதாகவே போலீசார் தடுத்து நிறுத்தினர். 2 பேர் மட்டுமே வேட்பாளருடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. முக கவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டும், மெட்டல் டிடெக்டர் எந்திரம் வழியாகவும் வரவழைத்தும் சோதனை நடத்தினர். இதேபோல் மற்ற தொகுதிகளிலும் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட நேற்று 2  பேர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றுள்ளனர்.

Next Story