சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேன், சைக்கிளில் மோதி வீட்டிற்குள் புகுந்தது; விவசாயி பலி
சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேன் சைக்கிளில் மோதி வீட்டிற்குள் புகுந்தது. இதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
விவசாயி சாவு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி(வயது 55). விவசாயியான இவர் தனது உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வாரியங்காவல் கடைவீதி அருகே வந்தபோது, எதிரே வேகமாக வந்த வேன், சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலுச்சாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.
அந்த வேன் ஏற்கனவே அதே சாலையில் ஸ்ரீதர்(13) என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் வந்ததாகவும், அருகில் இருந்தவர்கள் அந்த வேனை துரத்தி வந்தபோதுதான், சைக்கிளில் சென்ற பாலுச்சாமி மீது வேன் மோதியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் போலீசார், வேனை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும், மதுபோதையில் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அடிக்கடி விபத்து
இதையடுத்து பாலுச்சாமியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த ஸ்ரீதரும், டிரைவர் சுரேசும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில கடைக்காரர்கள் சாலை பகுதியில் விளம்பர பதாகைகள் போன்ற ஆக்கிரமிப்புகளை செய்ததால், சாலை குறுகிய நிலையில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story