தென்காசி மாவட்டத்தில் 7 பேர் வேட்புமனு தாக்கல்
தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் தொடங்கியது.
இதையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. 13, 14 ஆகிய தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.
வேட்புமனு தாக்கல்
2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. தென்காசி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் தென்காசி உதவி கலெக்டரும், உதவி தேர்தல் அதிகாரியுமான ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ராஜ் மனுதாக்கல் செய்தார்.
பின்னர் சங்கரன்கோவிலை சேர்ந்த மனோகர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் தற்போது அடிப்படை உறுப்பினராக இருக்கிறார். தென்காசி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைமை மாவட்ட தலைவர் பழனி நாடாரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மனோகர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம்
ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடார், சுயேச்சை வேட்பாளர்கள் ஆத்தியப்பன், சிவக்குமார் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story