லால்குடி அருகே கோவில் திருவிழாவில் கலவரம்: போலீசாரை திரும்ப பெறக்கோரி திரண்டு வந்த கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு


லால்குடி அருகே கோவில் திருவிழாவில் கலவரம்: போலீசாரை திரும்ப பெறக்கோரி திரண்டு வந்த கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு
x
தினத்தந்தி 16 March 2021 3:26 AM IST (Updated: 16 March 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக குவிக்கப்பட்ட போலீசாரை திரும்பப் பெற வேண்டும் என கோரி 2 கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

திருச்சி, 
லால்குடி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக குவிக்கப்பட்ட போலீசாரை திரும்பப் பெற வேண்டும் என கோரி 2 கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

கோவில் விழாவில் கலவரம்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் உள்ளது ஆச்சிராமவல்லி அம்மன் கோவில். இந்த கோவில் திருவிழாவில் கடந்த 10-ந் தேதி இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 
அப்போது ஏற்பட்ட தகராறில் 6 போலீசார் காயமடைந்தனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அம்மன் வீதி உலா நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

திரண்டு வந்த மக்கள்

இந்நிலையில் கீழ அன்பில், அண்ணாநகர் கிராமங்களை சேர்ந்தவர்கள் அய்யப்பன் தலைமையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கலெக்டரை சந்திக்க முடியாது. மனுவும் கொடுக்க முடியாது. திரும்பிச் செல்லுங்கள் என கூறினார்கள்.
ஆனால் அவர்கள் கலெக்டரை சந்தித்து நாங்கள் முறையிட வேண்டும் என கூறினார்கள். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கலெக்டரிடம் முறையீடு

 வாக்குவாதம் முற்றி அவர்கள் சாலை மறியல் செய்யத் தயாரானார்கள். இதனைத்தொடர்ந்து போலீசார் கிராம மக்கள் சார்பில் 4 பேரை மட்டும் அழைத்துக்கொண்டு கலெக்டரிடம் சென்றனர். 

கலெக்டரிடம் அவர்கள், கீழ் அன்பில், அண்ணாநகர் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப் பெற வேண்டும். இந்த இரு கிராம மக்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் எனக் கூறினார்கள். 

அதற்கு கலெக்டர் சிவராசு தேர்தல் புறக்கணிப்பு என்றெல்லாம் பேசக்கூடாது. இந்த பிரச்சினை தொடர்பாக நீங்கள் லால்குடி ஆர்.டி.ஓ.வை சந்தித்து எழுதிக் கொடுத்தால் போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story