ஈரோடு மாவட்டத்தில், நேற்று 2 அமைச்சர்கள் உள்பட வேட்பாளர்கள் மனுதாக்கல்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 அமைச்சர்கள் உள்பட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 அமைச்சர்கள் உள்பட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
மேலும் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளிலேயே வேட்பு மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) என 8 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் பெறப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து அலுவலகங்களிலும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் அறிவிப்பு படிவம் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தன்னுடைய வேட்பு மனுவை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் நேற்று தாக்கல் செய்தார். கோபி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 9-வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது வேட்பு மனுவில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.5 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்து 17 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ஆகும் என குறிப்பிட்டு உள்ளார்.
பவானி
பவானி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நேற்று பவானி தாலுகா அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அங்கு அவர் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அஜித் குமார், மாநில பா.ம.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவருடன் மேலும் 2 பேர் மட்டுமே ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு சென்றதும், அவருடைய விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்தனர். சரிபார்ப்பு முடிந்ததும் கே.வி.ராமலிங்கம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனை தேர்தல் நடத்தும் அதிகாரி சைபுதீன் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து வேட்பாளருக்கான உறுதிமொழியை வாசித்து கே.வி.ராமலிங்கம் கையொப்பமிட்டார்.
சொத்து விவரம்
கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வின் பெயரில் ரூ.47 லட்சத்து 34 ஆயிரத்து 499 அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 76 லட்சம் அசையா சொத்துகளும், ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 420 கடனும் உள்ளது. அவரது மனைவியின் பெயரில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 781 அசையும் சொத்துகளும், ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் அசையா சொத்துகளும், ரூ.14 லட்சத்து 93 ஆயிரத்து 206 கடனும் உள்ளது. கே.வி.ராமலிங்கத்தின் மகன் பெயரில் ரூ.28 லட்சத்து 77 ஆயிரத்து 830 அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன.
த.மா.கா. வேட்பாளர்
இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜாவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியும், ஈரோடு மேற்கு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் தனலட்சுமியும், அந்தியூர் சட்டமன்ற ெதாகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேலுவும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரும், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.கே.சி.பாலுவும் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story