கோவை அருகே ரெயில் மோதி காட்டு யானை படுகாயம்


கோவை அருகே  ரெயில் மோதி காட்டு யானை படுகாயம்
x
தினத்தந்தி 16 March 2021 7:37 AM IST (Updated: 16 March 2021 7:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ரெயில் மோதி, காட்டுயானை படுகாயம் அடைந்தது. அந்த யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கோவை

கோவை அருகே ரெயில் மோதி, காட்டுயானை படுகாயம் அடைந்தது. அந்த யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தண்டவாளத்தை கடந்த யானைகள் 

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு அருகே தமிழக-கேரள எல்லையில் வாளையார் ஆறு உள்ளது. நள்ளிரவு இந்த ஆற்றில் தண்ணீர் குடிக்க 6 யானைகள் வந்தன. 

பின்னர் அந்த யானைகள் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு அதிகாலை 1.20 மணியளவில் அருகே உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றது. 

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. யானைகள் கூட்டம் தண்டவாளத்தில் செல்வதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பி யானைகளை விரட்ட முயன்றார்.

ரெயில் மோதி படுகாயம் 

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யானை தண்டவாளத்தில் இருந்து 5 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. 

இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் மோதியதில் யானையின் தலை மற்றும் பின்பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. 

இதனால் அந்த யானையால் எழுந்து நடக்க முடியவில்லை. இதனால் அந்த இடத்திலேயே படுத்து உயிருக்கு போராடியது. 

தீவிர சிகிச்சை 

இது குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அப்போது அங்கு காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த காட்டு யானையின் அருகே 5 யானைகள் நின்றன. அவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்துவிட்டு காயம் அடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

படுகாயம் அடைந்த அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியிலேயே கூடாரம் அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக்கு காயம் அதிகமாக இருப்பதால் அதை காப்பாற்ற முடியுமா? என்று கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. 


Next Story