4 உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம்
4 உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம்
ஊட்டி
ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் 4 உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
விளையாட்டு மைதானம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஊட்டியில் எச்.ஏ.டி.பி. மைதானம் உள்ளது. இங்கு கைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனியாக பயிற்சி தளம் இருக்கிறது.
மேலும் கால்பந்து மைதானம் மற்றும் தடகள ஓடுதளம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று, மைதானத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மைதானத்தை சுற்றிலும் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டது. அங்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவற்றுக்கு தனித்தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
உயர்கோபுர மின்விளக்குகள்
தற்போது சிந்தடிக் ஓடுதளத்தில் காலை, மாலை ஆகிய வேளைகளில் வீரர்கள் தடகள பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளிமாநில வீரர்கள் மலைமேலிட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மைதானத்தை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக தற்போது உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மைதானத்தை சுற்றி உள்ள 4 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது. முன்னதாக குழி தோண்டப்பட்டு பில்லர் போடப்பட்டது.
அதன்பின்னர் 38 மீட்டர் உயரம் கொண்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருகிற நாட்களில் இரவு நேரங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்த வாய்ப்பு உள்ளது.
ஜெனரேட்டர் மூலம்...
இதுகுறித்து நீலகிரி விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ஜெயச்சந்திரன் கூறும்போது, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது 4 புறங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் விளக்குகள் சரியாக இயங்குகிறதா? என்று சோதனை நடத்தப்படும். 4 உயர் கோபுர மின்விளக்குகளை 2 ஜெனரேட்டர் மூலம் இயக்க முடியும். அதில் விளையாட்டு போட்டிகளை நடத்துபவர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story