வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தும் பணி நிறைவடைந்து உள்ளது. இதுதவிர அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் தொற்று பரவலை தடுக்க வாக்காளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 868 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். முதல் கட்டமாக 6,280 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
அதேபோல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருட்களை கொண்டு செல்பவர்கள், வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்கும் பணியாளர்கள் என 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகள் வழங்குவதற்காக பணியாளர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். வாக்காளர்கள் தங்களது வலது மற்றும் இடது கையில் கையுறைகளை அணிந்து எந்திரத்தில் வாக்களிக்க வேண்டும்.
ஓட்டு போட்ட பின்னர் கையுறையை அதற்கென்று வைக்கப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக கழற்றி போட வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவர்.
சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும், கட்டாயம் முகக்கவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் மற்ற அலுவலர்கள் கொரோனா பரவலை தடுக்க முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிய உள்ளனர்.
இதற்காக சென்னையில் இருந்து முழு பாதுகாப்பு கவச உடைகள் வரவழைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story