இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும் -கலெக்டர் அறிவுரை


இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும் -கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 16 March 2021 8:53 PM IST (Updated: 16 March 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

இளம் வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

ஊட்டி,

தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

யாருக்கு வாக்குரிமை அளித்தால் ஜனநாயகம் சரியாக காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில் விடுமுறை கிடைத்தால், அதில் நமது அன்றாட வேலையை கவனித்துவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாது. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பதை அறிந்து சுய சிந்தனையோடு முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும். 

நான் ஓட்டு போட்டால் மாற்றம் வருமா? என்று யோசிக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நமது வீட்டார், உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக்கூறி வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும். ஒரு வாக்கு கூட முடிவை மாற்றும். எனவே இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.

அரசியல் கட்சியினர் தேர்தல் சமயத்தில் மக்களை சந்திப்பது, வாக்குப்பதிவு நாளில் ஓட்டு போடுவது போன்ற காட்சிகளுடன் நாடகம் நடித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஓட்டு போட்ட பிறகு அழியாத மை வைக்கப்படும் ஆள்காட்டி விரலை உயர்த்தி காண்பிப்பது போன்ற வடிவில் மாணவர்கள் நின்றனர்.

Next Story