திருவண்ணாமலை; 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி


திருவண்ணாமலை; 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
x
தினத்தந்தி 16 March 2021 9:34 PM IST (Updated: 16 March 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதனை கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதனை கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டார்.

விழிப்புணர்வு கண்காட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி திருவண்ணாமலை அரசு அருங்காட்சியக வளாகத்தில், மாவட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களை கொண்டு 100 சதவீத வாக்களிப்பு குறித்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. 

இதில் போளூர் ஒன்றியம் சார்பில் வாழை இலையிலான பொருட்களை கொண்டும், வெம்பாக்கம் ஒன்றியம் சார்பில் செயற்கை நகைகளை கொண்டும், பெரணமல்லூர் ஒன்றியம் சார்பில் வளையல்களை கொண்டும், வந்தவாசி ஒன்றியம் சார்பில் அப்பளங்கள் கொண்டும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சார்பில் பாய்களை கொண்டும், கலசபாக்கம் ஒன்றியம் சார்பில் கரும்பு மற்றும் எலுமிச்சை பழங்களை கொண்டும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு மாதிரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

நவதானியங்கள்

தண்டராம்பட்டு ஒன்றியம் சார்பில் காய்கறிகளை கொண்டும், செங்கம் ஒன்றியம் சார்பில் பாசிமணி மற்றும் நவதானியங்களை கொண்டும் ‘நல்ல தேசத்தை உருவாக்குவோம்’ என்பது குறித்த விழிப்புணர்வு மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 

புதுப்பாளையம் ஒன்றியம் சார்பில் வேர்க்கடலைகளை கொண்டும், தெள்ளார் ஒன்றியம் சார்பில் செங்கல் மற்றும் கரிகளை கொண்டும் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

வேளாண்மை துறை சார்பில் வேர்கடலைகளை கொண்டும், ஜமுனாமரத்தூர் ஒன்றியம் சார்பில் சாமை அரிசியில் ‘நமது ஓட்டு நமது உரிமை’ என விழிப்புணர்வு காட்சிபடுத்தப்பட்டது. 

கண்காட்சியில் வாழைநாரில் செய்யப்பட்ட சாவி கொத்தில் தேர்தல் நாள், 100 சதவீத வாக்குப்பதிவு, சி விஜில், நல்லதொரு ஜனநாயகத்தை உருவாக்குவோம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

கோழி  முட்டை மூலம்

அனக்காவூர் ஒன்றியம் சார்பில் பால்கோவாவை கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு உதவி மையம் எண் - 8870700800, ஆரணி ஒன்றியம் சார்பில் பட்டு சேலைகளில் தேர்தல் நாள், 100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு என் உரிமை, தேர்தல் உதவி எண்- 1950 போன்ற விவரங்களுடன் நெய்யப்பட்டு காட்சிப்படுத்தினர். 

திருவண்ணாமலை ஒன்றியம் சார்பில் நவதானியங்களை கொண்டும், செய்யார் ஒன்றியம் சார்பில் ஜடேரி நாமக்கட்டிகளை கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சேத்துப்பட்டு ஒன்றியம் சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் மை தடவப்பட்டு விரல் வடிவிலான கற்சிற்பம் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டது. 

துரிஞ்சாபுரம் ஒன்றியம் சார்பில் நாட்டுக்கோழி முட்டைகளை கொண்டு வாக்காளர்களுக்கான உதவி எண்- 1950 காட்சிபடுத்தப்பட்டது. இவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி  பார்வையிட்டார். 

குடுகுடுப்பை காரர்கள்

தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து குடுகுடுப்பை காரர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதில் மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, அரசு அருங்காட்சியக காப்பாளர் சரவணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story