அதிகரித்து வரும் கொரோனா தொற்று: விழுப்புரத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்- அதிகாரிகள் நடவடிக்கை
அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க விழுப்புரத்தில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத்தொடங்கியது. தொடர்ந்து, படிப்படியாக குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதுபோல் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பழையபடி மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இந்த சூழலில் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலாளர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி காய்ச்சல் முகாம்களை அதிகரித்து கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்ததால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களிடையே அச்சம் இல்லாமல், அலட்சியமாக இருந்து வருகின்றனர். தற்போது பொது இடங்களுக்கு வருபவர்களில் 95 சதவீதத்தினர் முக கவசம் அணிவதில்லை. அணியாதவர்கள் மீது காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. தேர்தல் பிரசாரங்கள் தொடங்கிய நிலையில் முக கவசம் அணியாமல் பலர் கூட்டம், கூட்டமாக கடைவீதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ரூ.200 அபராதம் விதிப்பு
இந்நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது ஒரு அடையாளத்திற்காக இன்றைய தினம் (நேற்று) 10 பேருக்கு மட்டும் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படும், எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். இதுசம்பந்தமாக அவ்வப்போது ஒலிப்பெருக்கியிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான பகுதியில் கட்டுப்பாடுகளும் பழையபடியே தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. மக்கள் பயன்பாட்டுக்காக சானிடைசர் திரவத்தையும் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story