விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.11 லட்சம் பறிமுதல்
விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.11 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கவரிங் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாதவன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட், ஏட்டுகள் முரளி, கனகா ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வந்த தெலுங்கானா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியத்தை சேர்ந்த சாய்பிரசாத் (வயது 44) என்பவர் ரூ.9 லட்சம் எடுத்து வந்ததும், அவர் திண்டுக்கல்லுக்கு சந்தன மரக்கன்றுகள் வாங்க பணத்தை எடுத்து சென்றதும், ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் அவரிடம் இருந்த ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுடைநம்பி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்
இதேபோல் பறக்கும் படை அலுவலரும், தோட்டக்கலை இயக்குனருமான ராஜ்குமார் தலைமையில் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி அழுக்கு பாலம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த விக்கிரவாண்டியை சேர்ந்த தேவநாதன் என்பவரை நிறுத்தி, சோதனை செய்தனர்.
அதில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாயை அவர் எடுத்து வந்தது தெரியவந்தது. அப்போது தேவநாதன், தான் கப்பியாம்புலியூர் அருகே பெட்ரோல் பங்க் வைத்துள்ளேன், அங்கு விற்பனையான பணத்தை எடுத்து வருவதாக பறக்கும் படையினரிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதை விக்கிரவாண்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
கவரிங் நகைகள்
பனையபுரம் கூட்டுரோட்டில் நேற்று காலை 6.45 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெய்சன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டர் சைக்கிளில் வந்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த கவரிங் நகை வியாபாரி கோபாலகிருஷ்ணன்(44) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.59,950 மதிப்புள்ள கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுடை நம்பி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வி ஆகியோரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராம பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை தேர்தல் அதிகாரி குந்தலா தலைமையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் வந்த மரக்காணம் தாலுகா கரிபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இறால் பண்ணைக்கான வாடகை செலுத்துவதற்காக ரூ.71 ஆயிரத்து 500-ஐ எடுத்து செல்வதாக பறக்கும் படையினரிடம் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்ட போது, அவரிடம் இ்ல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story