பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்புக்குழு தலைவர் ஜோதிமணி அறிவுறுத்தி உள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 15,036 குடியிருப்புகள், 3965 வணிக நிறுவனங்கள் உள்ளன. வீடுகள், கடைகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த குப்பைகள் திருவாரூர் நெய்விளக்குதோப்பு பகுதியில் உள்ள 6 ஏக்கர் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
கண்காணிப்புக்குழு தலைவர் ஆய்வு
இங்கு ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பயோமைனிங் மூலம் தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 37 ஆயிரத்து 600 கியூபிக் மீட்டர் குப்பை கழிவுகள் கிடங்கில் தேக்கம் அடைந்து இருந்த நிலையில் தற்போது 30 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் எந்திரத்தின் மூலம் பிரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மாநில கண்காணிப்புகுழு தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை விரைவுப்படுத்த நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டும்
இங்கு குப்பைகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். மேலும் மரங்கள் நடப்படும். பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
அப்போது நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், நகராட்சி மேலாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், ஆய்வாளர் தங்கராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story