தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளரை கொல்ல முயற்சி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளரை கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளராக இருப்பவர் சலாம் பேக். இவர் அந்த பகுதியில் காலணி கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் நசீர், அலிமுத்துஜா ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் முகத்தில் துணியை கட்டியபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர் சலாம் பேக்கை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள்.
சாலை மறியல்
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை தாக்க முயன்ற போது நசீரும், அலிமுத்துஜாவும் தடுக்க முயன்றனர். இதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். இதனால் மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் நிலையம் அருகில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பதற்றம்
அப்போது மர்ம நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக தேன்கனிக்கோட்டையில் பெரும் பதற்றமாக காணப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story