ரங்கசாமி காரை மறித்து என்.ஆர்.காங்கிரசார் திடீர் முற்றுகை


ரங்கசாமி காரை மறித்து  என்.ஆர்.காங்கிரசார் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 17 March 2021 12:50 AM IST (Updated: 17 March 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

மண்ணாடிப்பட்டு தொகுதியை விட்டுக் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கசாமியின் காரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு நடுரோட்டில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, மார்ச்.17-
மண்ணாடிப்பட்டு தொகுதியை விட்டுக் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கசாமியின் காரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு நடுரோட்டில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க. விருப்பம்
புதுச்சேரி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
ஏற்கனவே வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் இந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. 
ஒரே தொகுதியில் போட்டியிட விரும்பி கூட்டணி கட்சிகளுக்குள் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதால் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. 
இந்தநிலையில் கடந்த தேர்தலில் வில்லியனூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தற்போது பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 
என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி
ஆனால் கடந்த 2011, 2016-ம் ஆண்டு தேர்தல்களில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரும் இந்த தொகுதியை குறிவைத்து தனது கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வந்தார்.
தற்போது இந்த தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் டி.பி.ஆர்.செல்வம் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். அப்போது அவர் பேசுகையில் விரக்தியடைந்து கண் கலங்கினார்.
இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு நேற்று காலை சென்றார். அப்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். 
காரை முற்றுகை
இதுபற்றிய தகவல் அறிந்து டி.பி.ஆர்.செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். மண்ணாடிப்பட்டு தொகுதியை பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அங்கு டி.பி.ஆர். செல்வம் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ரங்கசாமி வந்த காரை முற்றுகையிட்டு நடுரோட்டில் படுத்து உருண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது தொகுதியை கேட்டு கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையெல்லாம் காரில் இருந்தபடியே ரங்கசாமி பார்த்துக் கொண்டிருந்தார். அதன்பின் காரில் இருந்து இறங்கி அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அவரது காலில் விழுந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கதறி அழுதனர்.
சமாதானம்
இதையடுத்து அவர்களிடம் பேசிய ரங்கசாமி, ‘கூட்டணிக்காக தொகுதி விட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு செய்கிறேன். நல்லது நடக்கும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபாலை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். 
பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கும் ரங்கசாமியின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை ரங்கசாமி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனால் அங்கும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story