முதல்-அமைச்சரிடம் மனுகொடுக்க முடியாததால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


முதல்-அமைச்சரிடம் மனுகொடுக்க முடியாததால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2021 12:53 AM IST (Updated: 17 March 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க அ.தி.மு.க.வினர் காத்திருந்தனர். அப்போது,அவர் வந்த வேனை நிறுத்தாமல் சென்றதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம், மார்ச்.17-
ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க அ.தி.மு.க.வினர் காத்திருந்தனர். அப்போது,அவர் வந்த வேனை நிறுத்தாமல் சென்றதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருந்த அ.தி.மு.க.வினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தர்ம.தங்கவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை மாற்ற வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வினர் பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும், வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். நல்ல முடிவுகள் வரும் என்று அமைச்சர் கூறி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மாலையில் அவர் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தர்ம.தங்கவேலை ஆதரித்து புளிச்சங்காடு கைகாட்டியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வேனில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பனங்குளம் பாலம் அருகே கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் பாண்டியன் தலைமையில் வேட்பாளரை மாற்றக் கோரி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வேனை நிறுத்தவில்லை
மேலும் அவர்கள், வேட்பாளரை மாற்றுங்கள் எங்கள் முதல்வரே என்ற பதாகை வைத்திருந்தனர். முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் முதல்-அமைச்சரின் வேன் அங்கு நிற்காமலேயே சென்றது.
இதனால் காத்திருந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆலங்குடி வேட்பாளரை மாற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது, அங்கு கூடியிருந்த பெண்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வேனில் இருந்து இறங்கி விட்டனர். அதன் பிறகு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் வேட்பாளரை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும், அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளரை நிறுத்துவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story