கடலூர் முதுநகரில் தாய் மகளை கொன்ற வழக்கில் மீனவர் உள்பட 2 பேர் கைது


கடலூர் முதுநகரில்  தாய் மகளை கொன்ற வழக்கில் மீனவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2021 7:38 PM GMT (Updated: 16 March 2021 7:38 PM GMT)

தாய் மகளை கொன்ற வழக்கில் மீனவர் உள்பட 2 பேர் கைது

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள சலங்கக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூங்கொடி (வயது 45). இவர்களது மகள் மீனாவிற்கும் (28), சோனங்குப்பத்தை சேர்ந்த மீ்ன்பிடி தொழிலாளியான நம்புராஜ்(36) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 
வாய் பேச முடியாத காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளியான நம்புராஜூக்கு, மீனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனா குழந்தைகளுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு கடலூர் முதுநகர் பென்சனர் லைன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். 

தாய் மகள்

நேற்று முன்தினம் மாலை உடல்நலம் பாதிக்கப்பட்ட 2-வது குழந்தையை மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் முதுநகரில் உள்ள ஒரு டாக்டரிடம் காண்பிப்பதற்காக தூக்கிச் சென்றனர். சஞ்சீவிராயன்கோவில் தெரு வழியாக சென்றபோது, பின்னால் வந்த நம்புராஜ், மீனாவையும், பூங்கொடியையும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நம்புராஜை வலைவீசி தேடி வந்தனர். 

2 பேர் கைது

இந்த நிலையில் நம்புராஜ் சிவானந்தபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கடலூர் முதுநகர் போலீசாருக்கு நேற்றுமாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நம்புராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ராதாகிருஷ்ணன்(36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.அதைத்தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story