இதுவரை ரூ.29½ லட்சம் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.29½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பறிமுதல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 18 புகார்கள், குன்னம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 7 புகார்கள் என மொத்தம் 25 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்துக்கும் உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் மூலமாக உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்ற நபர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 தொகுதிகளில் 16 பேரிடம் மொத்தம் ரூ.29 லட்சத்து 64 ஆயிரத்து 330 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புகார்களை தெரிவிக்கலாம்
இதில் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் 3 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 67 திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேரிடம் இருந்து 185 மதுபாட்டில்களும், ஒருவரிடம் இருந்து 29 கட்சி துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 24 மணி நேரமும் 18004256375 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம். மேலும் 8438771950 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பியும் புகார் தெரிவிக்கலாம்.
Related Tags :
Next Story