கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த கமல்ஹாசன்


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த கமல்ஹாசன்
x
தினத்தந்தி 17 March 2021 1:58 AM IST (Updated: 17 March 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், நேற்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கோவை,

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று முன்தினம் கோவை வந்த அவர், வேட்பு மனுதாக்கல் செய்தார். பின்னர் இரவு ராஜவீதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

கூட்டம் முடிந்ததும், தெற்கு தொகுதிக்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். நேற்று காலை 6.30 மணியளவில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செய்தார். 

தனியாக நடந்து வந்த கமல்ஹாசனை பார்த்ததும் அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த பெண்கள், ஆண்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். சிலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அவர் அங்கு நடைபயிற்சி சென்றவர்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு தாருங்கள். நாங்கள் மாற்றத்தை தருவோம் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டீ குடித்தார்

தொடர்ந்து நடைபயணமாகவே புலியகுளம் சென்றார். அந்த பகுதியில் இருந்த டீக்கடைக்கு திடீரென்று சென்றார். கடையில் இருந்தவர்கள் கமல்ஹாசனை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

பின்னர் கடைக்காரரிடம் காசு கொடுத்து டீ வாங்கி குடித்தார். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள், டீ குடிக்க வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
சிலம்பம் சுற்றினார்

ராமநாதபுரம் 80 அடி சாலைக்கு சென்ற கமல், சாண்டோ சின்னப்பாதேவர் தொடங்கிய உடற்பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்த அவர், சிலம்பம் சுற்றினார். 

அங்கு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர், சின்னப்பா தேவர் ஆகியோரின் புகைப்படங்கள், சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டார். அங்கிருந்த சென்ற அவர், பஸ் நிறுத்தத்தில் நின்ற பஸ்சில் ஏறி பயணிகளிடம் நலம் விசாரித்தார். 

பின்னர் உக்கடம் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை பார்ப்பதற்காக காரில் உக்கடம் சென்றார். அங்குள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்று, அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தனது கட்சிக்கு ஆதரவை திரட்டினார். 

உக்கடம் பஸ்நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி இருந்தனர். அங்கு சென்ற கமல் ஆட்டோடிரைவர்களிடம் குறைகளை கேட்டார். பின்னர் அங்கு கூடி இருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஆட்டோவில் சென்றார்

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த ஆட்டோவில் ஏறிய கமல்ஹாசன், தான் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றார். 

எந்தவித முன்னறிவிப்பும் இன்று கமல்ஹாசன் மேற்கொண்ட இந்த திடீர் பிரசாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டலில் ஓய்வு எடுத்த அவர், மாலை 5.30 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

Next Story