வங்கி ஊழியர்களின் 2 வது நாள் வேலைநிறுத்தம்


வங்கி ஊழியர்களின் 2 வது நாள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 March 2021 2:05 AM IST (Updated: 17 March 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் 2 வது நாள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.2,000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் 2 வது நாள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.2000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்தம்
மத்திய பட்ஜெட்டில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அறிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2 வது நாளாக வேலைநிறுத்தம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் என மொத்தம் 350 வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். 
இதன்காரணமாக 350 வங்கி கிளைகள் நேற்று செயல்படவில்லை. கடைநிலை ஊழியர் முதல் மேலாளர் நிலை வரை ஊழியர்கள், அதிகாரிகள் என மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் நேற்று பணம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
ரூ.2000 கோடி பாதிப்பு
வேலைநிறுத்த போராட்டம் குறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் கூட்டுக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது
பொதுத்துறை வங்கிகளை பெருமுதலாளிகள் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி அளவில் உள்நாடு, வெளிநாடு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 நாளில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 4 கோடி காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல் முடங்கி இருக்கின்றன. 

Next Story