இளைய தலைமுறையினர் தொழில் முனைவோராக வேண்டும்
படித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராக மாறினால் தான் நாமும் நாடும் முன்னேற முடியும் என்ற உணர்வுடன் இளைய தலைமுறையினர் செயல்பட வேண்டுமென மூத்த அணு விஞ்ஞானி அறிவுறுத்தினார்.
விருதுநகர்,
படித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராக மாறினால் தான் நாமும் நாடும் முன்னேற முடியும் என்ற உணர்வுடன் இளைய தலைமுறையினர் செயல்பட வேண்டுமென மூத்த அணு விஞ்ஞானி அறிவுறுத்தினார்.
கருத்தரங்கம்
விருதுநகர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, நோபிள் பெண்கள் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இளைய தலைமுறையினர் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் போதும் என்று சென்றுவிடுவது ஏற்புடையதல்ல.
பாதிப்பு
நாம் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதை வாங்குவதற்கு நாம் கொடுக்கும் விலை அன்னிய செலாவணியாக வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது. ஆனால் நமது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் இங்கே தயாரித்தால் நமக்கு அன்னிய செலாவணி மீதமாகும் நிலை ஏற்படும்.
நாம் பயன்படுத்தும் கார், பிற வாகனங்கள், பிற சாதனங்கள் இவை அனைத்திலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வாங்குவதால் பாதிப்பு நமது நாட்டிற்கு தான்.
இதனால் தான் பிரதமர் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். எனவே படித்த இளைஞர்கள் தொழில்முனைவோராக மாற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய வணிகத்தை மட்டுமே நம்பி இருக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில்முனைவோராக மாறவேண்டும்.
எனவே தொழில்நுட்பம், அறிவியல், வணிகவியல் படிக்கும் மாணவ-மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலை தேடி செல்லாமல் நான்கு பேருக்கு வேலை தரும் நிலையில் தொழிலை தொடங்கி அதன் மூலம் நாமும், நாடும் முன்னேற வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் தொழில் முனைவோராக செயல்பட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ரோட்டரி சங்க தலைவர் வடிவேல், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story